தமிழ் இலக்கியம்
இலக்கியம் ( என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
- இன்பியல் இலக்கியம்
- அறிவியல் இலக்கியம்
'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்".அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகத் தரும் இலக்கியம்.
தமிழ் இலக்கியம்
முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கியம்
தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை, இன்பியல் இலக்கியங்களே. இது, "இலக்கிய வளர்ச்சி, அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்" ஏற்பட்டிருக்கலாம்.அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாகக் கருதப்படுகின்றது.
தமிழ் இலக்கிய வரலாற்றில், அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில், தற்கால ரீதியில், ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாகத் தெரியும். இன்று, அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி அறிவியல் தமிழை வளர்க்க தமிழ்நாடு அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெரிதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம், இலக்கியத்துக்காக என்பதை விட, இலக்கியம், மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.
வரலாறு
முதன்முதலாக இலக்கியம் எனும் வடிவத்தில் தோலாமொழித் தேவர்(கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி)இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பின்வரும் சூளாமணி:459 ஆம் பாடல் வாயிலாக அறியமுடிகிறது.
"காமநூலினுக்கு இலக்கியம் காட்டிய வளத்தால்"
அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டு வரும் ஒரு பழம்பாடலான பேரகத்தியத் திரட்டு,மேற்.1 இல்,
"இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்இன்று ஆகில் எண்ணெயும் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்."என்பதில் தான் இலக்கியம் எனும் சொல்லாட்சி எடுத்துக்காட்டு அல்லது உதாரணம் ஆகிய பொருளில் குறிப்பிடப் பெறாமல்,கற்பனை வளமும் கலையழகும் வாய்ந்ததொரு படைப்பு எனச் சுட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இப்பாடல் யாப்பருங்கல விருத்தியாசிரியரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.
ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான், மேற்கு நாட்டுக் கல்வியைப் பயின்று சிறந்த, மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களும், பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களும் ஆங்கிலத்தில் வழங்கிவரும் 'லிட்டிரேச்சர்' (Literature) என்னும் சொல்லிற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லாக இதனை வழக்கிற்குக் கொண்டு வந்துள்ளனர்.
பாவாணரின் கருத்து
மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலை, பல்வகை வடிவங்களை உடையது;அது பாட்டு வடிவமாகவும், உரைநடை வடிவமாகவும் இருக்கலாம்; ஒரு குறிப்பிட்ட பாவகையால் மட்டும் இயன்றதாக இருக்கலாம்; அல்லது பல்வேறு பாவகைகளால் அமைந்ததாகவும் இருக்கலாம். இவ்வாறு மொழியை வாயிலாகக் கொண்டு பல்வகை வடிவங்களில் வழங்கிவரும் கலைக்குப் பொதுவான பெயர் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. சோபரான்,ஜெனார்க்கஸ், ஆகியோரின் உரைநடைக் கோவைக்கும் சாக்ரடீஸின் உரையாடல்களுக்கும் பொருந்துமாறு அமையும் பொதுப்பெயர் எதுவும் தோன்றவில்லை.
இந்நிலையில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் இலக்கியம் என்னும் சொல்லிற்குப் பின்வரும் வகையில் தரும் விளக்கம் புதுமையும், முன்மைத் திறனும் (Originality) உடையதாகக் காணப்படுகின்றது.
"இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம். இலக்கு-குறி;குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது,இலக்கியம்.சிறந்த மொழிக் குறிக்கோளான, அமைப்பை எடுத்துக் கூறுவது, இலக்கணம். இலக்கணத்திற்கு அணங்கம் என்றும் இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு.
இலக்கு-லஷ்(வ) இலக்கியம்-லஷ்ய(வ) இலக்கணம்-இலஷணம்(வ) இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்கள் போல் லஷண , லஷய என்னும் வடசொற்கள் மொழியமைதியையும்(Grammar), நூற்றொகுதியையும்(Literature) குறிப்பதில்லை என்பது பாவாணரின் துணிவாகும்.இத்தகைய எண்ணப் போக்கே பரவலாகத் தமிழ் அறிஞர்கள் இடையே நிலவி வருகிறது.
Literature என்னும் ஆங்கிலச் சொல், இலக்கியம் எனும் பொருளில் கி.பி. ஆயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டில்(1812)தான் வழக்கிற்கு வந்ததென்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி எடுத்துரைக்கின்றது.
வரையறை
இலக்கியம் பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் என்பார், இலக்கியம், மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது; மனிதனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது; மனிதனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது; இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது என்று எடுத்துரைப்பார்.
இலக்கியத் தோற்றம்
தெய்வீக அகத்தூண்டுதலால் இலக்கியம் உருவாக்கப்படுவதாக எடுத்துரைப்படுகின்றது.தெய்வீக அகத் தூண்டுதல் பொதுவாகக் கலைப் படைப்பிற்கும் சிறப்பாக இலக்கியப் படைப்பிற்கும் உந்துதல் சக்தியாக அமைகிறது என்பது பிளேட்டோவின் கருத்தாகும்.
உள்ளப் பகுப்பாய்வின்(Psycho analysis)கோட்பாட்டை உருவாக்கிய ஃபிராய்ட் எனும் உளவியல் அறிஞர்,"அகத் தூண்டுதல் மனிதனுடைய அடிமனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனித உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அமைகிறது"என்கிறார்.
இலக்கியத்தின் இயல்புகள்
அறிஞர் ந.சஞ்சீவி, இலக்கியத்தின் சிறப்பு இயல்புகளாகக் கூறுவது,
1.புதுமை
2.பெருமை
3.பொதுமை
4.பொருண்மை
ஆகியனவாகும்.
இவற்றுள் புதுமை இருவகைப்படும். அவையாவன:
1.பாடுபொருளாகிய பொருண்மையில் புதுமை.
2.புத்தாக்கங்கள் இடம்பெறும் மற்றும் உணர்த்தும் முறையில் புதுமை.
பொருண்மையில் உயர்ந்ததாகவும், பொதுநலப் பண்பில் சிறந்ததாகவும், புதுமைக் கவர்ச்சி வாய்ந்ததாகவும், விளங்கும் இலக்கியமே பெருமையுடையதாக கருதப்படும்.இலக்கியத்தின் இந்நால்வகைப் பண்புகளும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் இயங்குகின்றன.[11]
இதுதவிர,அக இயல்புகளாக,
1) கலையழகு
2) குறிப்பாற்றல்
3) நிலைபேறுடைமை
4) ஆசிரியரின் ஆளுமை
5) இன்புறுத்தல்
6) கற்பனை
7) குறிக்கோள்
ஆகிய ஏழினையும்,
புற இயல்புகளாக,பின்வரும் வடிவப் பண்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவையாவன:
1) சீர்
2) தளை
3) தொடை
4) எதுகை
5) மோனை
6) ஒலிநயம்
7) உவமை
8) உருவகம்
9) படிமம்
10)குறியீடு
முதலான அணிநயங்களாகும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இலக்கிய வகைகள்
பொதுவாக, இலக்கியம், வடிவ அமைதி, பொருள், வெளிப்பாட்டு முறை ஆகியவற்றைக் கொண்டு பல வகையாகப் பாகுபடுத்தப்படும். இலக்கியம் உணர்வை சார்ந்து அமைவது ஆகும்.
அயல்நிலைப் பாகுபாடு
இலக்கியத்தைத் தூய இலக்கியம், சார்பு இலக்கியம் என வகைப்படுத்துவர். இவற்றுள் தூய இலக்கியம் எனப்படுவது, இலக்கியத்தின் இயல்புகள் யாவும் முழுமையாக இடம் பெற்றுள்ள படைப்பிலக்கியமாகும். கற்பனைக்கோ, கலையழகிற்கோ இடம் தராமல் கருத்துகளை அறிவுறுத்தும் இலக்கியம் சார்பு இலக்கியமாகும்.
அனுபவ நிலைப் பாகுபாடு
ஓர் இலக்கிய படைப்பானது, படைப்பாளனின் அனுபவத் தன்மை, செறிவு வகை, மனித உறவு, முயற்சித்திறன் ஆகியவற்றிற்கேற்ப படைக்கப்படுகிறது. இந்த அனுபவ நிலையையும் பொருளின் இயல்பையும் கருத்தில் கொண்டு இலக்கியம், ஐந்து வகைப்பட்டனவாகப் பாகுபடுத்தப்படும்.
(1)தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் படைக்கப்படும் இலக்கியம். இவற்றுள் முதன்மை இடம் பெறுவது தன்னுணர்ச்சிப் பாடல்களாகும். அடுத்து இசைப்பாடல்களும் பக்திப் பாடல்களும் அனுபூதிப் பாடல்களும், இரங்கற்பாக்களும், தன் வரலாறுகளும், பயண நூல்களும், வாழ்க்கை விளக்கமும், கலை இலக்கிய திறனாய்வுகளும் அடங்கும்.
(2)மனித இனத்திற்குப் பொதுவாக அமைந்த வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம். அறநூல்கள், காப்பியங்கள், வரலாற்று நூல்கள், அம்மானைப் பாடல்கள், கதைப்பாடல்கள், கதைகள், புதினங்கள், நாடகங்கள் முதலானவை உதாரணங்களாகும்.
(3)பல்வகையாக விரிந்து கிடக்கும் சமுதாயத்தைச் சித்திரிக்கும் இலக்கியம்.இதனுள் வருணனை, விளக்கம், கிளத்தல் நிறைந்த இலக்கிய வகைகள் அடங்கும். கம்பனின் இராமகாதை போன்ற காப்பியங்களும்,மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்ற வருணனை செய்யுள்கள் எடுத்துக்காட்டுகளாவன.
(4)இயற்கை பற்றி எழுந்த இலக்கியம். எடுத்துக்காட்டு:அழகின் சிரிப்பு,ஆற்றுப்படை நூல்கள், ஐந்திணைப் பாடல்கள்,குறவஞ்சி இலக்கியங்கள், காப்பியங்களில் இடம் பெறும் நாட்டு,நகர,ஆற்றுப் படலங்கள் முதலியன.
(5)இலக்கியம் பற்றியும் கலைநயம் பற்றியும் எடுத்துரைக்கும் இலக்கியம். இவற்றுள் ஐந்து இலக்கண நூல்கள், தண்டியலங்காரம், உவமான சங்கிரகம் போன்ற அணியிலக்கண நூல்கள், பஞ்சமரபு ,கூத்து நூல் போன்ற கலைவிளக்க நூல்கள் அடங்கும்.
வடிவ அமைதிப் பாகுபாடு
துறை,தாழிசை,விருத்தம் உள்ளிட்ட செய்யுள்கள், யாப்பிலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் இதன் பாற்படும்.
இலக்கியத்தின் உள்ளடக்கம்
புறவய யதார்த்தத்தின் கலைப்படைப்பே இலக்கியத்தின் உள்ளடக்கம். முதலாவதாக இது உண்மைக்கும் கலைப் படைப்பிற்கும் உள்ள உறவையும், அடுத்து கலை பிரதிபலிப்பினை அதன் தொடர்புகளோடு ஆராய்வதாகும்.
இலக்கியத்தில் உருவம்
உருவத்தின் இரு தன்மைகள் வருணனையும், உணர்ச்சி வெளியீடும் ஆகும்.
இதன் கூறுகளாவன:
1) கலை இயைபு
2) கலைப் பின்னல்
3) கலையின் உள்ளடக்கம்,உருவம் இவற்றின் ஒருமை.
4) உள்ளடக்கத்தின் சாரம் உருவத்தில் பொதிந்திருத்தல்.
5) அனுபவத்தின் பொதுமை, உருவத்தில் வெளிப்படுதல்.
6) உருவ,உள்ளடக்க விகாரங்கள்.
கலை இயைபு
ஒரு கலைப்படைப்பில்,அதன் பகுதிகளுக்கும் அதன் முழுமைக்கும் இடையேயான இணைப்பே கலை இயைபு ஆகும்.
கலைப்பின்னல்
ஒரு கருத்தைக் கலைப்படைப்பாக மாற்றுவதற்கு கலைப்பின்னல் ஊடகமாக இருக்கிறது.
இயைபும் கலைப்பின்னல
Comments
Post a Comment